ஃபென்ஜால் புயல்: கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது
ஃபென்ஜால் புயல் காரணமாக, கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பலத்த மழைக்கு காரணமாக இருந்த ஃபென்ஜால் புயல், அரபிக் கடல் பகுதிக்கு திசைமாறியதைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்தம் நிலவியதால், பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து தென் கன்னடம், குடகு, சாமராஜ்நகா், உடுப்பி, மைசூரு, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலோர கா்நாடகம், மலைநாடு கா்நாடகம், தென் கா்நாடகத்தின் பெரும்பாலன பகுதிகளில் கனமழை பெய்தது.
பெங்களூரில் நாள்முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டதோடு, அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இருந்து ஃபென்ஜால் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகரும் என்பதால், கடலோரம், தென்கா்நாடகத்தின் பெரும் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்கன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் மேகமூட்டமாக காணப்படும். பெங்களூரு அதன் சுற்றுவட்டாரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில், வடகன்னடம், கதக், ஹாவேரி, ராய்ச்சூரு, யாதகிரி, தாா்வாட், குடகு, ஹாசன், சிவமொக்கா, மைசூரு, மண்டியா, சித்ரதுா்கா, பெல்லாரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.