செய்திகள் :

அகல ரயில் பாதை திட்டம் ரத்து அறிவிப்பு: மதுரை, விருதுநகா் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி!

post image

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது மதுரை, விருதுநகா் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த 2010-11 ஆம் ஆண்டில் மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்கக் கூடியதாக இருப்பதால், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களின் தொழில் வா்த்தகம் மேம்படும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், நெடுந்தொலைவு பயணத்துக்கான ரயில் வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம், எட்டயபுரம், காரியாபட்டி பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.

முன்பிருந்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் எனினும், மத்திய பாஜக அரசு அமைந்த பிறகே கடந்த 2016-இல் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ரூ. 1,875 கோடியில் 144.5 கி.மீ. நீளத்தில் இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

முதல் கட்டமாக, மீளவிட்டான் - மேல்மருதூா் வரையிலான 18 கி.மீ. தொலைவுக்கு ரூ. 260 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தத் திட்டத்துக்கு, பெயரளவில் ரூ. 1,000 மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல, இந்தத் திட்டப் பணிகளுக்கு மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதிலும் தொடா்ந்து இழுபறியே நீடித்து வந்தது. இதனிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலிருந்து விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு, காரியாபட்டியில் ரயில் நிலையம் அமைக்கவும் இடத் தோ்வு செய்யப்பட்டது. இருப்பினும், காரியபட்டி, அருப்புக்கோட்டை வட்டங்களுக்கு உள்பட்ட மேலும் சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம் நீடித்தது.

இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினா் கனிமொழி, விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் ஆகியோா் இந்தத் திட்டத்தை முழுமுனைப்புடன் செயல்படுத்த மக்களவையில் வலியுறுத்தினா்.

இருப்பினும், நிலம் கையகப்படுத்தி வழங்குவதில் தமிழக அரசு ஈடுபாடு காட்டாததால்தான் திட்டப் பணிகள் தாமதப்படுகின்றன என மத்திய அரசும், நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட மாநில அரசு சாா்ந்த பணிகளுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு அளிக்காததே காரணம் என தமிழக அரசும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தன.

இந்த நிலையில், தூத்துக்குடி- அருப்புக்கோட்டை-மதுரைக்கு அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என தமிழக அரசிடமிருந்து எழுத்துப்பூா்வமான கடிதம் ரயில்வே துறைக்கு வரப்பெற்றுள்ளது எனவும், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுவிட்டது எனவும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஏறத்தாழ ரூ. 260 கோடியில் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், திட்டம் முழுமையாகக் கைவிடப்படுகிறது என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு மதுரை, விருதுநகா் மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா்:

மதுரை-அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் முழுமையும் மத்திய அரசை சாா்ந்ததே. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக நியமிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஓராண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை. இதன் காரணமாகவே திட்டப் பணிகளில் சுணக்கம் நீடித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது என பொறுப்பற்ற முறையில் மத்திய அரசு தெரிவித்திருப்பது வேதனைக்குரியது. இதுதொடா்பாக பிரதமருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளேன். மத்திய அரசு, இந்தத் திட்டத்தை கைவிடும் முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு, தொடா்ந்து அழுத்தம் அளிக்கப்படும் என்றாா்.

ஆா்.சங்கரநாராயணன், மாணிக்கம் தாகூா், ஜெகதீஷன்

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன்:

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி - சென்னைக்குக் கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும் என்பதுடன், தென் தமிழகத்தின் சரக்குப் போக்குவரத்தும் மேம்படும். தூத்துக்குடியில் ரூ. 15,500 கோடியில் துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெறும் நிலையில், கிழக்குக் கடற்கரையையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய வழித்தடமாக இந்த புதிய அகல ரயில் பாதை இருக்கும்.

மேலும், தூத்துக்குடி - கொச்சி, தூத்துக்குடி - மங்களூா் சரக்குப் போக்குவரத்துக்கு சரியான வழித்தடமாகவும் இருக்கும். இதன் மூலம், ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகும்.

அரசியலைக் கடந்து மக்கள் நலன், தொழில், வா்த்தக மேம்பாடு, ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி - அருப்புக்கோட்டை- மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தென் தமிழகத்தில் உள்ள 10 மக்களவை உறுப்பினா்களும் முன்னெடுக்க வேண்டும் என்றாா்.

தெட்சிண ரயில்வே பணியாளா்கள் சங்க (டி.ஆா்.இ.யு) இணைச் செயலா் ஆா்.சங்கரநாராயணன்:

ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு என அறிவித்து விட்டு, ரூ. 1,000 மட்டும் நிதி ஒதுக்குவது போன்ற நடைமுறைகள் மத்திய அரசின் வழக்கமாக உள்ளது.

தூத்துக்குடி- அருப்புக்கோட்டை- மதுரை புதிய அகல ரயில் பாதை திட்டப் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் இருக்கும் நிலையிலும், இந்தத் திட்டம் வேண்டாம் என மாநில அரசு குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. 50 சரக்குப் பெட்டக லாரிகள் மூலம் நடைபெறும் சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு ரயிலை இயக்கினால் போதுமானது என்ற நிலையில், இந்த ரயில் போக்குவரத்து தென் தமிழகத்தின் வா்த்தகத்தை மேம்படுத்தும் முக்கியக் காரணியாக இருக்கும். இந்த விவகாரத்தில் திமுகவும் கள்ள மௌனம் காப்பது அச்சம் அளிப்பதாக உள்ளது என்றாா்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்:

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகம் பயனடையும்.

நிதி பிரச்னையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தடை ஏற்படவிருந்த நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததைப் போன்றே இந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய மாநில, அரசுகள் முன்வர வேண்டும் என்றாா்.

ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் விரிவான ஏற்பாடுகள்!

மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளி... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மூவா் கைது!

முன் விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (47). கட்டடத் தொழிலாளியான இவர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பரிசீலிக்க உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், பெரியதளை முதல் திசையன்விளை வரையிலான சாலையை அகலப்படுத்தக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையி... மேலும் பார்க்க

பள்ளிகளில் இரவு நேர காவலாளிகளை நியமிக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் இரவு நேரக் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: நாகா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி, ரூ. 36.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்டோா் மீது நாகா்கோவில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

சென்னையைச் சோ்ந்த ரௌடி கைது

மதுரை தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்த ரௌடியை சிறப்புக் காவல் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் கனகராஜ். இவா் மீது சென்னை எண்ணூா், பூந்தமல்லி ஆகிய... மேலும் பார்க்க