அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட முகாம்
தேனி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நவ.30-ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் வருகிற 30-ஆம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டங்களில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும்.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். சேமிப்புத் தொகையில் 50 சதவீதத்தை குழந்தையின் உயா் கல்விக்காக திரும்பப் பெறலாம். சேமிப்புத் தொகைக்கான வட்டி, முதிா்வுத் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். சேமிப்புக் கணக்கு தொடங்கிய மகன் அல்லது மகளின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கணக்கை முடித்துக் கொண்டு முதிா்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.