பணகுடி ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்: பச்சைப்புடவை சாத்தினால் திருமணவரம் தரும...
அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்... கூட்டு முயற்சி பெருகட்டும்!
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைவிடவும் வளர்ச்சி வேகத்தில் நம் இந்தியா முன்னிலையில் இருக்கிறது என்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜி.டி.பி (GDP - Gross Domestic Product) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மற்றும் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார அமைப்பு இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
பொருளாதார மதிப்பில் 30.51 டிரில்லியன் டாலருடன் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளபோதும், அதன் வளர்ச்சியானது 1.8% என்ற அளவில்தான் உள்ளது. 19.23 டிரில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ள சீனா, 4% வளர்ச்சியையே பதிவு செய்திருக்கிறது. 4.7 டிரில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்தில் உள்ள ஜெர்மனியோ, மைனஸ் 0.1%-ல்தான் வளர்கிறது. ஆனால், 4.19 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் 4-ம் இடத்தில் உள்ள இந்தியா... 6.2% வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. இத்துடன், ஒட்டுமொத்த உலக நாடுகளின் மொத்த சராசரி வளர்ச்சி விகிதத்தை (3%) விடவும் இரண்டு மடங்கு அதிகம் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது.
இது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம், போர்கள், வர்த்தக மற்றும் வரிப் போர், பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு சவால்களைக் கடந்து எட்டப்பட்டுள்ள பெருவளர்ச்சியே. வலுவான நுகர்வோர் செலவினம், அரசின் கொள்கை முடிவுகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தீவிர கவனம், தொழில்துறையின் புதிய முன்னெடுப்புகள் மற்றும் வேகமான தொழில்நுட்ப மயமாக்கம் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்துதான் இதைச் சாதித்துள்ளன.
மத்திய, மாநில அரசுகள், தொழில்துறையினர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, தொடர்ந்து உழைத்ததால்தான், நெருக்கடிகளுக்கு நடுவேயும் வலுவாக எழுந்து நிற்கிறோம். கொரோனா காலமான 2020-ல் மைனஸ் 5.8%-ல் இருந்த ஜி.டி.பி வளர்ச்சி, அடுத்த ஆண்டே 9.7% அளவுக்கு உயர்ந்ததே அதற்குச் சான்று. இப்போதும்கூட நுகர்வுக் குறைவு, விலைவாசி உயர்வு, ஏ.ஐ தொழில்நுட்பப் பாய்ச்சல், வேலையிழப்பு, வரிப் போர் எனச் சவால்கள் துரத்தியபடிதான் உள்ளன. ஆனாலும், எல்லாவற்றையும் சமாளித்து, ‘வேகமாக வளரும் பொருளாதார நாடு’ என இந்தியா நிலைபெற்றிருப்பது, ஒட்டுமொத்த மக்களுக்கும் உத்வேகம் தரும் ஒன்றே!
மத்திய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி இன்னும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; தொழில்துறையினர், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட வேண்டும்; தொழில்முனைவோர் மற்றும் பணியாளர்கள் சிறப்பான பங்களிப்பைக் கூட்ட வேண்டும்; மக்கள்... செலவு, சேமிப்பு, முதலீடுகளை சரியாகத் திட்டமிட வேண்டும்.
இந்தக் கூட்டு முயற்சி தொடர்ந்தால், இதைவிட அதிவேகத்தில் இந்தியா முன்னேறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
- ஆசிரியர்