நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Albu...
பணகுடி ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்: பச்சைப்புடவை சாத்தினால் திருமணவரம் தரும் சிவகாமி அம்பிகை!
நம் தேசமெங்கும், ராமபிரான் தன் அவதாரத்தின்போது சிவபூஜை செய்த தலங்கள் ஏராளம் உள்ளன. அவ்வாறு ஸ்ரீ ராமர் வழிபட்ட சுவாமியை ராமநாதசுவாமி, ராமலிங்கசுவாமி என்று அடையாளப்படுத்தி ஆலயம் அமைத்து வழிபட்டுவருகிறார்கள் நம் முன்னோர்கள். அப்படி ஸ்ரீ ராமர் வழிபட்ட ஓர் அற்புத ஆலயம்தான் திருநெல்வேலி அருகேயுள்ள பணகுடி ஸ்ரீராமலிங்கசுவாமி ஆலயம்.
முற்காலத்தில் பாண்டியபுரம் என்று போற்றப்பட்ட இந்தத் தலத்தில் தற்போதைய பெயர்தான் பணகுடி. திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இத்தலம்.

அனுமன் சஞ்சீவி பர்வதத்தைச் சுமந்துவந்தபோது மருந்துமலையின் பல துகள்கள் தேசமெங்கும் விழுந்தன. அவையே சிறுசிறு மலைகளாக அமைந்தன. குறிப்பாக அவை மூலிகை வனங்களாகவும் விளங்கின. அந்த வகையில் உருவான ஒரு மலைச் சிகரம் தான் மகேந்திரகிரி. அந்தச் சிகரத்திலிருந்து புறப்படும் நதிக்கு `அனுமன் நதி’ என்றே திருப்பெயர்.
இந்த நதியின் கரையில்தான் மிக அழகுற அமைந்திருக்கிறது, பணகுடி சிவாலயம். இங்கே சந்நிதிகொண்டிருக்கும் சுவாமிக்கு அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகை சிவகாமியம்மை.
ராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான், இந்தப் பகுதியில் அனுமன் நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அதன் காரணமாகவே இங்குள்ள ஈஸ்வரனுக்கு ராமலிங்கேஸ்வரர் என்று திருப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள். ராமலிங்க சுவாமியை வழிபட்டால், 'தம் இன்னல்கள் தீருகின்றன' என்று தினந்தோறும் தவறாமல் வழிபடுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
ஆதியில் இத்தலத்தில் ஈசன் மட்டுமே கோயில்கொண்டிருக்க அம்பிகையின் திருவுருவம் இல்லாமல் இருந்தது. அதன்பின் அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் கிணறு தோண்டும்போது அம்பிகை வெளிப்பட்டாள் என்றும் அந்த அம்பிகைக்கு சிவகாமி அம்பிகை என்று பெயர் சூட்டி இங்கே பிரதிஷ்டை செய்தனர் என்கிறது தலபுராணம்.
சிவகாமி அம்மை தோன்றிய அந்த ஊரின் பெயரும் `சிவகாமிபுரம்' என்று மாறிவிட்டது.
14-ம் நூற்றாண்டில் தென்காசிப் பகுதியை ஆட்சி செய்து வந்த உத்தம பாண்டியன் இந்த ஆலயத்தில் திருப்பணி செய்து புனரமைத்ததாகச் சொல்கிறார்கள். பாண்டியர் திருப்பணிக்கு சான்றாக ஆலயங்களில் மீன் சின்னங்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் இங்கே தனித் தனி விமானங்கள் உள்ளன. கோயிலில் பரிவார மூர்த்தங்களாக விநாயகர், கன்னி விநாயகர், சரஸ்வதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர், பைரவர், சனீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
பிரார்த்தனைச் சிறப்புகள்
சித்திரை மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று இரவு, பசும்பாலில் மிளகு சேர்த்து அரைத்து, சிவலிங்கத்துக்குச் சாற்றி, மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு அபிஷேகம் செய்தால், அந்த வருடம் நன்கு மழையும். விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.
அதேபோல், தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு வடைமாலை சமர்ப்பித்து, வெண்பூசணியில் தீபம் ஏற்றினால், தீராத கடன் பிரச்னைகளும் தீருவதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.
இங்கு கோயில்கொண்டுள்ள சிவகாமி அம்மையை மனதில் நினைத்துத் தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும் என்கிறார்கள்.
சிவகாமியம்மைக்குப் பச்சை நிறத்தில் பட்டுச்சேலை, பொட்டுத் தாலி, மல்லிகைப்பூ மாலை ஆகியவற்றை அணிவித்து, வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வசதி இல்லாதவர்கள் அம்பிகையை மனதார வழிபட்டாலே அவள் வேண்டும் வரத்தை விரைவில் அருள்வாள் என்கிறார்கள்.

இந்தக் கோயிலில் அருளும் வாராஹிதேவியை வழிபட்டால் தீவினைகள் நீங்கி நல்லவை நடக்கவும் என்கிறார்கள். மேலும், வாராஹிதேவிக்கு தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டால், தீராத பிணிகளும் தீருமாம்.
ராமலிங்க சுவாமிக்கு தை மாதம் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்போற்சவமும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
இந்தக் கோயிலில் நம்பிசிங்க பெருமாளும் அருள்வது கூடுதல் சிறப்பு. அவருக்கு வைகாசி மாதம் 5 நாள்கள் வசந்தோற்சவமும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருடசேவையும், சித்ரா பௌர்ணமியன்று 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி செல்லும் அன்பர்கள் வாய்ப்பிருந்தால் இந்தப் பணகுடி திருத்தலத்துக்கும் சென்று, ராமலிங்கேஸ்வரரையும் சிவகாமி அம்மையையும் வணங்கி வாருங்கள். வாழ்வில் வெற்றிகள் தொடர்ந்துவரும்.