DUDE: ``இது காதலின் உரிமை பற்றிப் பேசும் படம்'' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
Arasan: ``இதுவரை சிம்புவை இப்படி பார்த்திருக்கமாட்டீர்கள்'' - அரசன் புரோமோவைப் பார்த்த மிஷ்கின்!
சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்வலர்களிடமும் இந்தப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்கம் மற்றும் யூட்யூப் என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு புரோமோ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு.

இன்றைய தினம், திரையரங்குகளில் `அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நாளை காலை யூட்யூபில் வெளியாகும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இயக்குநர் நெல்சனும் இந்த புரோமோவில் நடித்திருக்கிறார்.
இதுவரை அவர் இயக்கிய படங்களின் புரோமோ வீடியோக்களில் மட்டுமே நடித்து நம்மை என்டர்டெயின் செய்த நெல்சன், தற்போது இப்படத்தின் ப்ரோமோ வீடியோவிலும் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
3 கொலைகளை செய்ததற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் சிம்பு தன்னுடைய கதையை படமாக நெல்சனிடம் எடுக்கச் சொல்வதைத்தான் இந்தக் காணொளியின் உள்ளடக்கம்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் புரோமோவில் தனுஷ் ரெஃபரென்ஸ் வைத்திருப்பதை ஹைலைட் விஷயமாக ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களுடன் இணைந்து திரையரங்குகளில் இந்த புரோமோ காணொளியை காண விரும்பியதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக வரவில்லை என சிம்பு பேசிய காணொளியையும் இந்த வீடியோவில் இணைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கமலா திரையரங்கில், டி.ஆர்.ராஜேந்திரன், இயக்குநர் மிஷ்கின் போன்ற திரைப்பிரபலங்கள் இந்தப் புரோமோவை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மிஷ்கின், ``புரோமோ மிகவும் அற்புதமாக இருந்தது. வெற்றிமாறனின் பட உருவாக்கமே புதிதாக இருக்கும். நாங்களும் அதையெல்லாம் பார்த்து முயன்றுகொண்டே இருப்போம்.
இந்தப் பட உருவாக்கம் மிகவும் புதிதாக இருக்கிறது. நான் பார்த்து மிகவும் வியந்தேன். ஒரு இயக்குநராக இதில் வெற்றிமாறனின் உழைப்பு தெரிகிறது.
இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும் என்பதால், அதில் என்ன மேஜிக் செய்யப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இதுவரை சிம்புவை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்.
இந்தப் படம் சிம்புவை வேறு ஒரு களத்துக்கு கொண்டு செல்லும். இந்தியாவின் மிகப்பெரும் நடிகராக சிம்பு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இதில் இருக்கின்றன. சிம்புவுடன் இணைந்து படம் எடுக்கத் தயாராக இருக்கிறேன். கதையெல்லாம் பேசி ஓகே ஆகிவிட்டது. தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். வெற்றிமாறனின் படத்தில் டீ கொடுக்கும் காட்சிக்கு அழைத்தால் கூட நான் நடிப்பேன்," என்றார்.