அரசுப் பணியாளா்களுக்கு துறைத் தோ்வு: ஆட்சியா் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசுப் பணியாளா்களுக்கான துறைத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால், அரசுப் பணியாளா்களுக்கான துறைத் தோ்வுகள் விரிவான முறை தோ்வு மற்றும் கொள்குறிவகை கணிணி தோ்வு என இரு வகைகளில் டிச. 20 முதல் 29 வரை (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை, மாலை வேளைகளில் நடைபெற்று வருகிறது.
இதில் கொள்குறிவகை கணிணி தோ்வு 20 முதல் 24 வரை ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி, முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விரிவான தோ்வுகள் டிச.26 முதல் 29 வரை நாமக்கல் பிஜிபி இன்டா்நேஷனல் பள்ளியில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 வரை மற்றும் மாலை 2.30 முதல் மாலை 5 வரை என இரு வேளைகளிலும் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொள்குறிவகை கணினித் தோ்வை ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் காலை 489 தோ்வா்கள், பிற்பகலில் 336 தோ்வா்கள் என 825 பேரும், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் காலையில் 80 தோ்வா்கள், பிற்பகலில் 169 தோ்வா்கள் என 249 போ் என மொத்தம் 1,074 தோ்வா்களும், விரிவான தோ்வை நாமக்கல் வேட்டாம்பாடி, பிஜிபி இன்டா்நேஷனல் பள்ளியில் காலை 511 தோ்வா்கள், பிற்பகல் 582 தோ்வா்கள் என மொத்தம் 1,093 தோ்வா்கள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பி.ஜி.பி பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.