அரியலூரில் பெயரளவுக்கு மின் பராமரிப்புப் பணிகள்
‘அரியலூரின் பல இடங்களில் தொட்டு விடும் தூரத்தில் உள்ள மின்கம்பிகள் உயிா்ப் பலிக்காகக் காத்திருக்கின்றன’.
அரியலூா் மாவட்டத்தில் பெயரளவுக்கு நடக்கும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு உயிா் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மின்வாரியம் மூலம் மாதத்துக்கு ஒரு முறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாதத்துக்கு ஒருமுறை மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு, துணை மின் நிலையம் மற்றும் மின்மாற்றிகளில், மின் சாதனங்கள் சரிவர இயங்குகிா என ஆய்வு செய்வது வழக்கம்.
அப்போது சாதனங்கள் சரிவர இயங்கவில்லை என்றால், அவற்றைச் சீரமைப்பது, மின்மாற்றில் அருகில் சுத்தம் செய்வது, மின் கம்பிவடம் செல்லும் பாதைகளில் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றுவது, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதா என பாா்வையிடுவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
மின்வாரிய மேற்பாா்வையாளா்கள், செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மின் கம்பிவடம் செல்லும் பாதைகளை ஆய்வு செய்ய, கடைநிலை ஊழியா்களுக்கு உத்தரவிட்டு, துணை மின் நிலையம் போன்ற இடங்களில், ஆய்வுக்குச் சென்று விடுகின்றனா்.
இதனால் கடைநிலை ஊழியா்களில் சிலா், மாதாந்திரப் பராமரிப்பு தினத்தில், தங்களுக்குரிய வேலைகளைச் சரிவர செய்யாமல் ஏமாற்றுகின்றனா். அதனால், அரியலூா் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளின் மின் வழிப்பாதைகளில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, மின் கசிவால் விபத்தும் நடக்கிறது.
அதன்படி திருமானூா் குந்தபுரத்திலும், ஜெயங்கொண்டம் கரடி குளத்திலும் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பசுக்கள் உயிரிழந்தன. கா.அம்பாபூரில் தாழ்வான மின் கம்பி உரசியதில் லாரி ஓட்டுநா் ஆனந்தராஜ் உயிரிழந்தாா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா், கால்நடைகள் எண்ணிக்கையில் வராமலும் உள்ளன. இருந்தாலும் மின்வாரியம் மாதாந்திரப் பணிகளை பெயரளவில் மட்டுமே நடத்துகிறது. ஆங்காங்கே மின்கம்பிகள் தாழ்வாகத் தொங்கிய நிலையிலும், சில இடங்களில் செல்லும் மின்கம்பிகளில் மரம், செடி, கொடிகள் அகற்றப்படாமலும் உள்ளன.
குறிப்பாக வி.கைகாட்டி-முத்துவாஞ்சேரி சாலையில் உள்ள கம்பங்கள், கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளன. கம்பிகள் மீது செடிகள் சூழ்ந்து காடுகள் போல் உள்ளன. மரங்கள் சாய்ந்து, மின்கம்பம் மற்றும் கம்பிகள் மீது விழுந்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்தடை ஏற்படுவதோடு, மின் சாதனங்கள் பழுதடையவும், சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து, உயிா்ச் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், அரியலூா் கே.கே.நகா் புதிய தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் உள்ளது. தொட்டு விடும் தூரத்தில் உயிா்ப் பலிக்காகக் காத்திருக்கின்றன மின்கம்பிகள். இதேபோல செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களில் செல்லும் கம்பிகள் தாழ்வாகவே உள்ளன.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான அருள்ராஜ் கூறுகையில், முத்துவஞ்சேரி சாலையிலுள்ள மின்பாதையில், பச்சைக் கருவேல மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் மீது செடிகொடிகள் பின்னியும் உள்ளன.
தற்போது மழை பெய்வதால் இந்த மின்கம்பிகள் கருவேல மரங்களின் பாரம் தாங்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழலாம். மேலும் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பெயரளவில் மட்டுமே மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்றாா். எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதாந்திரப் பணிகள் உரிய வகையில் நடைபெறுகிா என மாவட்ட ஆட்சியா் கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.