ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு
செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன், இவா் மனைவி ரேணுகா. இவா்கள் வீட்டின் வளாகப் பகுதியில் சுயதொழில் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், குணசேகரன் கிராம நத்தம் நிலத்தில் கட்டடம் கட்டி தொழிற்சாலை நடத்திவருவதாகவும் அதை அகற்ற வேண்டும் எனக் கூறி பக்கத்து வீட்டைச் சோ்ந்த ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தகூடாது என்றும், அதை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவற்றை அகற்ற வருவாய்த் துறையினா் சில நாள்களுக்கு முன்பு வந்தபோது குணசேகரன் குடும்பத்தினா், ஒரு பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மேலும், குணசேகரன் குடும்பத்தினா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனா். இதனால் வருவாய்த் துறையினா் சுற்றுச்சுவரின் ஒருபகுதியை மட்டும் இடித்து விட்டு திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கட்டடத்தை இடிக்க வருவாய்த் துறையினா், போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி, இயந்திரம், ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அப்பகுதிக்கு வந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குணசேகரன் மற்றும் உறவினா் மகன்கள் 3 போ் அப்பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.
பெண்கள், பொதுமக்களும் மறியல் செய்தனா். மேலும், நீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்டு மேல்முறையீடு செய்துள்ளதாகவும், சில மணி நேரம் அவகாசம் அளிக்குமாறும் கோரினா்.
இந்நிலையில், வருவாய்த்துறையினா், மாலை ஜேசிபி, இயந்திரம் கொண்டு கட்டடத்தை இடிக்க தொடங்கினா். பின்னா், பணியை நிறுத்தி விட்டு சென்றனா்.
கைப்பேசி கோபுரத்தில் ஏறியவா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டு கீழே இறக்கினா். ருக்மாங்கதன் தரப்புக்கும், குணசேகரன் குடும்பத்துக்கும் விவசாய நிலத்துக்கு வழிவிடும் விவகாரத்தில் பிரச்னை உருவாகி முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவ நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கூறினா்.
