ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்! - என்ன நடந்தது?
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் (Kellogg College) உரையாற்றியிருக்கிறார். அப்போது, லண்டனில் உள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) - UK மம்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியிருப்பது மேற்கு வங்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி உரையாற்ற ஆரம்பித்ததும், இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்கு எதிராகவும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி பெண்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களின் இனப்படுகொலைக்காகவும், மேற்கு வங்கத்தில் நிலவிக்கொண்டிருக்கிற ஊழல்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறது. அதில், 'மம்தா பானர்ஜியின் உரையை எதிர்த்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் இந்திய மாணவர் கூட்டமைப்பு - ஐக்கிய ராச்சியம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சி நடத்தும் ஊழல் நிறைந்த, ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு (SFI-UK) குரல் எழுப்பியது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விகளுக்கு, ''இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது; இந்த வழக்கு மத்திய அரசிடம் உள்ளது. இங்கே அரசியல் செய்யாதீர்கள். இந்த மேடை அரசியலுக்கானது அல்ல. நான் பேச நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் என்னை அவமதிக்கவில்லை; உங்கள் நிறுவனத்தை அவமதிக்கிறீர்கள். நீங்கள் செய்வது சரியல்ல'' என்றார் மம்தா பானர்ஜி. இந்தச் சம்பவம், இந்திய அரசியல் மற்றும் வெளிநாடுகளில் இந்திய தலைவர்களின் உரைகளுக்கு எதிராக ஏற்படும் எதிர்ப்புகளைப் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.