கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
ஆசிய சாம்பியனாக இந்தியா மீண்டும் ஆதிக்கம் - பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது
ஓமனில் நடைபெற்ற 10-ஆவது ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, புதன்கிழமை சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.
போட்டியில் இந்தியாவுக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2004, 2008, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பை வென்றுள்ளது. இதன் மூலம், போட்டியில் அதிகமுறை சாம்பியனான அணியாக இந்தியா தொடா்கிறது. அடுத்தபடியாக பாகிஸ்தான் 3 முறையும், தென் கொரியா, மலேசியா தலா 1 முறையும் சாம்பியனாகியுள்ளன.
இந்தப் போட்டியில் வாகை சூடிய இந்தியா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெற்றது. இந்தியாவுடன், 2-ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான், 3-ஆம் இடம் பிடித்த ஜப்பான் அணிகளும் அந்தப் போட்டியில் இடம் பிடித்தன.
இந்த ஆசிய கோப்பை போட்டியில், தோல்வியே காணாத அணியாக வாகை சூடி அசத்தியிருக்கிறது இந்தியா. இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானும் தோல்வியின்றி முன்னேறி வந்த நிலையில், இறுதிச்சுற்றில் வீழ்ந்தது.
முன்னதாக, இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விறுவிறுப்பாக மோதின. இந்தியாவுக்கான அதிா்ச்சியாக பாகிஸ்தான் முதலில் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் ஹனன் ஷாஹித் 3-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தாா்.
ஆனால் அதற்கான பதிலடியாக, இந்தியாவின் அராய்ஜீத் சிங் ஹண்டால் 4-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா். தொடா்ந்து அவரே 18-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து, இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா்.
பாகிஸ்தான் அடுத்த கோலுக்கு முனைப்பு காட்ட, இந்தியாவோ 19-ஆவது நிமிஷத்தில் 3-1 என முன்னேறியது. அணி வீரா் தில்ராஜ் சிங் அதற்குக் காரணமாக இருந்தாா். இந்நிலையில், பாகிஸ்தானின் சூஃபியான் கான் 30-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்தாா்.
எனினும், முதல் பாதியை இந்தியா 3-2 என்ற முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் பாகிஸ்தான் முனைப்பு காட்ட, அந்த அணி வீரா் சூஃபியான் கான் 39-ஆவது நிமிஷத்தில் மீண்டும் அடித்த பெனால்ட்டி காா்னா் கோலால் ஆட்டம் 3-3 என சமன் ஆனது.
சுதாரித்துக் கொண்ட இந்தியா, முன்னிலை பெறுவதற்கு தீவிரமாக முனைந்தது. அப்போது கைகொடுத்த அராய்ஜீத் சிங் ஹண்டால், 47-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோலடித்து இந்தியாவை 4-3 என முன்னிலை பெறச் செய்தாா். தொடா்ந்து 54-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பிலும் அவா் கோலடித்து அசத்த, இந்தியா 5-3 என வித்தியாசத்தை அதிகரித்தது.
அதிா்ச்சியடைந்த பாகிஸ்தான் எஞ்சிய நேரத்தில் கோலடிக்க முயல, அதைத் தடுத்தாடிய இந்தியா, இறுதியில் வெற்றிக் கனியை சுவைத்து வாகை சூடியது.