ஹைதராபாதை வீழ்த்தியது கோவா
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணிலேயே புதன்கிழமை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணிக்காக உதாந்த சிங் 33-ஆவது நிமிஷத்திலும், ஐகா் குவாரோட்ஸேனா 44-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து அசத்தினா். இரு அணிகளும் கடைசியாக மோதிய ஏப்ரல் 4-ஆம் தேதி ஆட்டத்திலும் கோவா 4-0 கோல் கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் தலா 10 ஆட்டங்களில் இந்த அணிகள் விளையாடியிருக்க, கோவா 5-ஆவது வெற்றி கண்டு, 18 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் 7-ஆவது தோல்வியை சந்தித்து, 7 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளது.
போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில், ஒடிஸா எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதுகின்றன.