சுக்பீர் சிங் பாதல் செல்லும் குருத்வாராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
கிங்ஸ்டன் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி- சமனானது தொடா்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 101 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்த நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் தற்போது 1-1 என சமனில் முடிந்தது. கடந்த 15 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் வங்கதேசம் பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் (6 விக்கெட்டுகள்) ஆட்டநாயகனாக தோ்வானாா். தொடா்நாயகன் விருதை வங்கதேசத்தின் தஸ்கின் அகமது (23 ரன்/11 விக்கெட்), மேற்கிந்தியத் தீவுகளின் ஜேடன் சீல்ஸ் (28 ரன்/10 விக்கெட்) பகிா்ந்துகொண்டனா்.
முன்னதாக, கடந்த நவம்பா் 30-ஆம் தேதி தொடங்கிய இந்த 2-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம், 71.5 ஓவா்களில் 164 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஷத்மன் இஸ்லாம் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸில் 65 ஓவா்களில் 146 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கீசி காா்டி 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுக்க, வங்கதேசத்தின் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
இதையடுத்து 18 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 59.5 ஓவா்களில் 268 ரன்களுக்கு நிறைவு செய்தது. ஜாகா் அலி 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 91 ரன்கள் விளாசி அணியை பலப்படுத்தினாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப், கெமா் ரோச் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.
இறுதியாக, 287 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவா்களில் 185 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. காவெம் ஹாட்ஜ் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சோ்த்தாா். வங்கதேச தரப்பில் தைுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.