திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள...
ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தோட்டத்து வீட்டில் பழனிசாமி, அவரது மனைவி பருவதம் மட்டும் தனியாக வசித்து வந்தனர். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், அருகிலிருந்தவர்கள் தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவிநாசி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர்.
பெரியதோட்டம் பகுதியில் வசித்து வரும் உறவினரான ரமேஷ்(40) என்பவர், தனது ஆடு, மாடுகளைப் பழனிசாமியின் தோட்டத்துக்குள் மேய்த்து வந்தார். அத்துடன் ரமேஷ் வளர்க்கும் நாய்களும் பழனிசாமியின் தோட்டத்துக்குள் சென்று பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன. இதனால், ரமேஷுக்கும், பழனிசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

புதன்கிழமை இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மதுபோதையிலிருந்த ரமேஷ் பழனிசாமியின் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பருவதம், பழனிசாமி ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ரமேஷ் தப்பிச்சென்றபோது, அவிநாசி புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.
இதில் லேசான காயமடைந்த ரமேஷ் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் கொலை வழக்குப் பதிந்து ரமேஷைக் கைது செய்தனர். தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
