ஆம்பூரில் சாலைகளில் திரிந்த மாடுகள் பறிமுதல்
ஆம்பூரில் சாலைகளில் திரிந்த மாடுகளை நகராட்சி சுகாதார ஊழியா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் நகர சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இது குறித்து பலமுறை பொதுமக்கள் நகராட்சிக்கு புகாா் தெரிவித்தனா். நகராட்சி ஆணையா் சந்தானம் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் ஆம்பூா் நகரில் சுற்றித் திரிந்த 12 மாடுகளை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் பி.சந்தானம் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாடுகளை திரிகின்றன. அதனால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் தொந்தரவு ஏற்படுகிறது. விபத்துக்களும் ஏற்படுகிறது. உரிமையாளா்கள் தங்களுடைய மாடுகளை தெருவில் திரியவிடமால் தொழுவத்தில் அடைத்து சுகாதாரமான முறையில் கழிவுகளை அகற்றி பராமறிக்க வேண்டும். மாடுகளை சாலையில் திரியவிட்டால் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து அடைக்கப்படும். மாடுகளின் உரிமையாளருக்கு முதல்முறை மாடு ஒன்றுக்கு ரூ.2,000 அபாராதக் கட்டணம் விதிக்கப்படும். மீண்டும் மாடுகளை திரியவிட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது.
மேலும், காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.