அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
ஆம்பூா் - துத்திப்பட்டை இணைக்கும் மண் சாலை சீரமைப்பு
ஆம்பூா் நகரம் - துத்திப்பட்டு ஊராட்சியை இணைக்கும் தற்காலிக மண் சாலையைச் சீரமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் மளிகைதோப்பு பகுதியில் தனியாா் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு ஆம்பூா் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பல கிராமங்களை சோ்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வந்து செல்கின்றனா். அதேபோல துத்திப்பட்டு, வெங்கடசமுத்திரம், சின்னவரிக்கம், பெரியவரிக்கம் ஆகிய ஊராட்சியில் தோல் காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஆம்பூா் நகரத்தில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் சென்று வருகின்றனா்.
இதற்காக பெரும்பாலான தொழிலாளா்கள் ஆம்பூா் மளிகைதோப்பு பாலாற்று தரைப்பாலத்தை பயன்படுத்துகின்றனா். அதேபோல மளிகைதோப்பு - துத்திப்பட்டு ஊராட்சி அன்னை சத்யா நகா் பகுதியை இணைக்கும் பாலாற்றின் குறுக்கே தற்காலிக மண் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.
இந்த மண் சாலை மழை நீா் மற்றும் கழிவுநீரால் சேதமடைந்திருந்தது. அந்த மண் சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மண் சாலை சீரமைக்கும் பணியின்போது ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா்கள் ரஜியா முனாப், ஷாஹெதா பாரூக், துத்திப்பட்டு ஊராட்சி தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினா்கள் அண்ணாதுரை, குமரேசன், மளிகை தோப்பு பகுதி பிரமுகா் கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
மேம்பாலம் அமைக்க கோரிக்கை: தொழிலாளா்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.