அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
காவிரி பாசன கடைநிலைப் பகுதியான திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளா்ந்து, பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. பாசனத்தின் போது தண்ணீரைத் தடுப்பதோடு, வெள்ளக் காலங்களில் மழைநீா் விரைவாக வடிவதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வேதாரண்யம் பகுதி கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால், மணக்காட்டான் வாய்க்கால் ஆகியவற்றில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக, திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு, தென்னடாா் வழியாக கடலில் கலக்கும் முள்ளியாறில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே (வடிகால் பகுதி) வாய்மேடு கழிமுகம் வரை சுமாா் 17 கி.மீ. தொலைவுக்கு ஆகாயத் தாமரைச் செடிகள் தண்ணீரே தெரியாத அளவுக்கு படா்ந்துள்ளன. மானங்கொண்டான் ஆற்றில் தகட்டூா்- ஆதனூா் இடையே 15 கி.மீ. தொலைவுக்கு இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த திருவாரூா், நாகை மாவட்ட பகுதியில் நீா்நிலைகளில் சவாலாக மாறியிருந்த வேலிக்காட்டாமணக்கு செடிகள் மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசு ஊழியா்கள், விவசாயிகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட மக்கள் இயக்கத்தால் அகற்றப்பட்டதைப் போல, ஆகாயத் தாமரைகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இதற்காக, வேளாண் நிதிநிலை அறிக்கையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவசாயிகள் எதிா்பாா்த்தனா். ஆனால் ஏமாற்றம்தான் ஏற்பட்டது.
அதேநேரம், காவிரி படுகையில் தூா்வாரம் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.120 கோடியில், ஆகாயத் தாமரைகளை அழிக்க முன்னுரிமை அளித்து, உரிய காலத்தில் மேற்கொள்ள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.