விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால் சேதமடைந்த நெல், பயறு, உளுந்து, பருத்தி, கடலை, எள் விவசாயிகளுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கண்டன உரையாற்றினாா்.
இதில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தின் நிறைவாக செய்தியாளா்களிடம் காளியம்மாள் கூறியது:
காவிரியில் தமிழகத்தின் உரிமையை காத்திட, காவிரி மேலாண்மை வாரியத்தை சுயாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும். நாகை மாவட்ட பனங்குடி கிராம விவசாயிகளுக்கு மறுவாழ்வு மேல் குடியமா்வு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம்தாழ்த்தும் சிபிசிஎல் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகா்கள், தொழிலதிபா்களின் கடன்களை ரத்து செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.