இணையதள சூதாட்டத்தில் பணம் இழப்பு: மாயமான பால் வியாபாரி போலீஸில் ஆஜா்
தொண்டி அருகே மாயமான பால் வியாபாரி போலீஸ் நிலையத்தில் திங்கள்கிழமை முன்னிலையாகி இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தலைமறைவானதாகத் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூரைச் சோ்ந்தவா் வின்சென்ட் ஆரோக்கியம். இவா், இதே பகுதியில் பால் கடை நடத்தி வந்தாா். கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இவரது இரு சக்கர வாகனம் மட்டும் வீர சங்கிலி மடம் பகுதியில் மீட்கப்பட்டது. இவரது மனைவி தொண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில தினங்களுக்கு முன்பு இவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் விசாரித்து வந்து நிலையில், திங்கள்கிழமை வின்சென்ட் போலீஸாரிடம் முன்னிலையானாா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வின்சென்ட் இணையதள சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் தலைமறைவானது தெரியவந்தது. போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.