Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
இப்பவும் மீடியாதான் வாழ்க்கை | 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் | இப்ப என்ன பண்றாங்க பகுதி 10
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.
இப்போது மேக் அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம்.
விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
திரும்பிப் பார்க்க வைத்த நேருக்கு நேர்
நாடு முழுக்க பத்திரிகையாளரகள் பலர் பிரச்னைகளை சந்தித்து வருவதும், அதைத் தங்கள் போராட்டத்தால் வென்றதும் தொடர்கதைதான். விகடனும் அதைச் சந்தித்திருக்கிறது.
ஆனால் மோடி ஆட்சி வருவதற்கு முன்பே தமிழக பாரதிய ஜனதா போராட்டத்தினால் தன் 18 ஆண்டு கால டிவி பயணத்தை முடித்த ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா?
அவர் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த வீரபாண்டியன். 'சன் டிவி' வீரபாண்டியன் என்றால் பளிச்சென உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
இந்த வாரம் நாம் பார்க்கப்போவது இவரைப் பற்றிதான்.

சீரியல்களூக்கும், சினிமா, ரியாலிட்டி ஷோக்களுக்கும்தான் தானா டிவி என ஏக்கத்துடன் இருந்த அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தை தனது ஆழமான நேர்காணல் நிகழ்ச்சி மூலம் திருப்திப்படுத்தியவர்.
சன் டிவியில் இவர் வழங்கிய 'நேருக்கு நேர்' பலரையும் இவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனச் சொல்லலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிற பிரபலங்களிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்டதன் மூலமே வீரபாண்டியனை பலருக்கும் பிடித்துப்போனது. பாலின, வயது வித்தியாசமின்றி நிகழ்ச்சிக்கு கூடியது ரசிகர் கூட்டம்.
பேட்டி எடுக்கும்போது தன்னை முன்னிலைப்படுத்தும் விஷயம் எதுவும் இல்லாமல் பேட்டி தர வந்திருப்பவரிடமிருந்து என்ன கேள்விக்குப் பதில் வேண்டுமோ அதை வாங்குவதிலேயே குறியாக இருப்பதே வீரபாண்டியன் ஸ்டைல். சிறப்பு விருந்தினர்களும், அந்த நேர்காணல் ஒரு முழுமையானதாக இருந்ததாகச் சொல்லிச் செல்வார்கள்.
முசாபர் நகர் கலவரம், வரிந்து கட்டிய பா.ஜ.க
அதே சமயம் பல நேர்காணல்களில், சூடான கேள்விகளால் பரபரப்பான சம்பவங்களும் நடந்தன.
மீடியாக்காரராக சன் டிவியிலிருந்த வீரபாண்டியன் 'நேருக்கு நேர்' மூலம் கொஞ்சம் பிரபலமானதும், பலவேறு அமைப்பினர் அவரை நிகழ்ச்சிகளுக்குப் பேச அழைத்தார்கள்.
எனினும் எநதவொரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் அதே நேரம், மீடியா வேலை மற்றும் சொற்பொழிவுகள் என இயங்கி வந்தார்.
இந்தச் சமயத்தில்தான் உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர் கலவரம் அரங்கேறியது.
வீரபாண்டியன் வாழ்க்கையிலும் இந்தக் கலவரம் பாதிப்பை உண்டாக்கியது என்றால் மிகையில்லை.

2013ம் ஆண்டு முசாபர் நகர் கலவரம் நடக்கிறது. ஒரு ஈவ்டீசிங்கில் ஆரம்பித்து இரு தரப்பினரிடையே பெரும் கலவரமாக மூண்டதில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டவரக்ள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கலவரம் தொடங்கும் முன்னரே அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அடிபடத் தொடங்கிவிட்டது.
கலவரம் முடிந்த அடுத்த சில தினங்களில் ஒரு பொதுக்கூட்டம். மனித உரிமை அமைப்பு ஒன்று கலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய வீரபாண்டியன் அறிக்கையைத் தொட்டு உரை நிகழ்த்துகிறார்.
தன் பேச்சில் கலவரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலருக்கிருந்த தொடர்பு குறித்துப் பேசியதாக மறுநாளே அவருக்கெதிராக வரிந்து கட்டினர் பா.ஜ.க.வினர்.
'வீரபாண்டியன் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது; அவர் சேனலில் இருந்தால் பா.ஜ.க. தலைவர்கள் எவரும் சன் டிவியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள்' என சன் டிவிக்குக் கடிதம் எழுதினார்கள்.
பாரதிய ஜனதா தவிர அவர்களுடன் நெருக்கமான தொடர்புடைய சுமார் 13 அமைப்புகள் வீரபாண்டியனுக்கு எதிராகக் களமிறங்கின.

மீடியா பயணத்தில் பிரேக்
சேனல் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகச் சொன்னார்கள் இவர்கள். சன் டிவி எவ்வளவோ விளக்கம் தந்து பார்த்தது. ஆனால் எவரும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை.
அதேநேரம் வீரபாண்டியனுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்தன. தி.க, இடது சாரிக் கட்சிகள் அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டன. பொதுமக்களும் இவருக்கு ஆதரவாகப் பேசினார்கள். இருந்தாலும் இறுதியில் சன் டிவியில் இருந்து வீரபாண்டியன் வெளியேறினார்.
சன் டிவியிலிருந்து வெளியேறிய பிந்தைய ஒரு நாளில் ஒரு மேடையில் பேசிய போது, 'சன் டிவியிலிருந்த 18 ஆண்டு காலம் வாழ்க்கையில் ரொம்பவே மறக்க முடியாதது. கலைஞர் கருணாநிதி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தொடங்கி தமிழகத்தின் பல முக்கியத் தலைவர்களுடன் என்னை நெருக்கமாக்கியது 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி. அந்த அனுபவங்கள் எனக்குக் கற்றுத் தந்த விஷயங்களும் அதிகம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

புதிய பாதை
சரி இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் வீரபாண்டியன்?
அவருடன் பணிபுரிந்த தற்போதும் அவருடன் தொடர்பிலிருக்கும் அவரது நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.
''ஒரு சர்வதேசச் செய்தி நிறுவனத்துடன் தன்னை இணைச்சுகிட்டு இப்பவும் அதே உத்வேகத்துடன் தான் ஒர்க் பண்ணிட்டிருக்கார். தென்னிந்தியச் செய்திகளை இவரும் இன்னும் சிலருமா சேகரிச்சு அந்தச் செய்தி நிறுவனத்துக்கு அனுப்புவாங்க. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளானு இதுக்காக பயணப்பட்டுட்டே இருப்பாங்கனு சொல்றாங்க.. அதேநேரம் சென்னையில் இருந்தா சொற்பொழிவு, கல்லூரிகள்ல உரைன்னு தனது வழக்கமான அந்த விஷயங்களையும் பண்ணிட்டுதான் இருக்கார்' என்கிறார்கள் அவர்கள்.