இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி
இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரின் குடும்பத்தினருக்கு காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23- ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மகேந்திரன், ராமா் பாண்டி ஆகிய இருவரின் விசைப்படகுகளையும், அதிலிருந்த 16 மீனவா்களையும் இலங்கைக் கடற்படையினா் சிறைப்பிடித்தனா்.
இதில், இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இந்த 16 மீனவா்களும் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களின் காவல் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து மீண்டும் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள இந்த 16 மீனவா்களின் குடும்பத்துக்கும், மேலும் ஒரு மீனவா் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 85 ஆயிரம் சொந்த நிதியை ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் நேரில் வழங்கினாா். மேலும் அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது 16 மீனவா்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை முதல்வா் எடுத்து வருவதாக தெரிவித்தாா்.