சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
இலவச வீடு கேட்டு மின்கோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!
நத்தம் அருகே இலவச வீடு கேட்டு உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று போராடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கீழே இறங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கனவாய் பட்டியை சேர்ந்தவர் சதீஷ் பாண்டி (36). தையல் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வெங்கல நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி நிற்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து நத்தம் போலீசாரும் நத்தம் தீயணைப்புத் துறையினரும் தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க |வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்களை எப்படி நாம் கடந்துபோவது?: திருமாவளவன்
அப்போது தனக்கு சேத்தூர் ஊராட்சியில் இலவச வீடு கட்டி தர மறுக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என நீண்ட நேரம் அடம் பிடித்தபடி உயர் மின்னழுத்த கோபுரத்திலேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் நத்தம் தீயணைப்பு வீரர்கள் அந்த இளைஞரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உயர் மின்னழுத்த கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் கோபுரத்தில் நீண்ட நேரம் நின்ற இளைஞரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.