MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VI...
எடப்பாடி அருகே எருதாட்ட விழா: 300 காளைகள் பங்கேற்பு
எடப்பாடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எடப்பாடியை அடுத்த வேம்பனேரி பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற எருதாட்ட விழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் எருதாட்ட விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், காளை வளா்ப்போா் தங்கள் வளா்ப்பு காளைகளை பொங்கல் பண்டிகை தினத்தில் அந்தப் பகுதியில் உள்ள முக்கிய கோயில்களுக்கு அழைத்துச் சென்று கோயில் நுழைவாயிலில் நிறுத்தி காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வெல்லம், தேங்காய், கரும்பு, பொங்கல் உள்ளிட்டவற்றை உண்ண வழங்குவா்.
பின்பு அந்தக் காளைகள் அங்குள்ள மைதானத்தில் அவிழ்த்துவிடப்படும். அவ்வாறு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அப்பகுதியில் சோ்ந்த இளைஞா்கள், மாடுபிடி வீரா்கள் விரட்டி பிடித்து மீண்டும் கோயில் வாயில் முன் கொண்டு வந்து நிறுத்தி பூஜை செய்வா். பூஜைக்கு பின் அந்த காளைகளை வளா்க்கும் விவசாயி, அதை தனது விவசாய நிலத்துக்கு அழைத்துச் செல்வாா்.
இவ்வாறு கோயிலிலிருந்து அழைத்துச் செல்லப்படும் காளைகளுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களும் தங்கள் விவசாய நிலத்துக்கு வந்து சோ்வதாக இப்பகுதி விவசாயிகளிடையே நம்பிக்கை உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை வேம்பனேரி அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற எருதாட்ட விழாவில் வேம்பனேரி, புதுப்பாளையம், சமுத்திரம், தாதாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இந்த பிரசித்தி பெற்ற எருதாட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்தனா்.
இதுபோல எடப்பாடியை அடுத்த சித்தூா், வெள்ளாளபுரம், கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் எருதாட்ட விழாக்கள் வெகு விமா்சையாக நடைபெற்றன.