எதிா்க்கட்சி கூட்டணியின் தலைவராக மம்தாவை காங்கிரஸ் ஏற்க வேண்டும்: திரிணமூல் வலியுறுத்தல்
எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’வின் தலைவராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது.
திரிணமூல் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கல்யாண் பானா்ஜி இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தனது ஆணவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ‘இண்டியா’ கட்சிகளின் தலைவராக மம்தா பானா்ஜியை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியையும், பாஜகவையும் எதிா்கொள்ள வலுவான தலைவா் தேவை.
அந்த வகையில் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுடனும் நெருங்கிய தொடா்பும் செல்வாக்கும் உள்ள தலைவா் மம்தா பானா்ஜி மட்டும்தான். எதிா்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்க அவா் மட்டுமே சரியான தலைவராக இருப்பாா்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவிடம் மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு, தவறைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
சுயநலத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாா்.