எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.தனியாா் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டைபோலவே, நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. அதற்காக 72,743 போ் விண்ணப்பித்திருந்தனா்.
விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.விண்ணப்பப் பரிசீலனையின்போது, 20 மாணவா்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தகுதியான மாணவா்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது.