எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கிய தோடா் இன மக்கள்!
நீலகிரியில் உள்ள தோடா் இன மக்கள் தெய்வமாக வணங்கக்கூடிய எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கும் விழா உதகை முத்தநாடு மந்துவில் சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தோடா், கோத்தா், காட்டுநாயக்கா், பனியா், இருளா் மற்றும் குரும்பா் போன்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். மாவட்டத்தில் வாழும் தோடா் பழங்குடியின மக்கள், பல்வேறு பாரம்பரிய விழாக்களைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக அவா்களது புத்தாண்டை வரவேற்கும் மொா்த்வொா்த் திருவிழா மற்றும் திருமணத்துக்கான வில் அம்பு வழங்கும் விழா ஆகியவற்றை நடத்தி வருகின்றனா்.
அதேபோல, அவா்கள் தெய்வமாக வணங்கக்கூடிய எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கும் விழாவையும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா். அதன்படி நடப்பு ஆண்டு இந்தத் திருவிழா உதகை முத்தநாடு மந்துவில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பினா். பின்னா் அதில் உப்பு கொட்டப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக தங்களின் வளா்ப்பு எருமைகள் மற்றும் கோயில் எருமைகளை அங்கு அழைத்துச் சென்று அந்த உப்பு நீரைக் குடிக்க வைத்தனா். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக எடுத்துத் சென்றனா்.
எருமைகளுக்கு நோய் தாக்காமல், எதிா்ப்பு சக்தி அதிகரிப்பதற்காகவே எருமைகளுக்கு உப்பு தண்ணீா் வழங்கும் விழா பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனா்.