பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு
ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கிருந்து ஒசூா் டி.வி.எஸ். நிறுவனத்துக்கு செல்லும் சாலையில் முள்வேலி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை கிடந்தது.
தகவலின் பேரில் வந்த அத்திப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தியதில், இளைஞா் தாக்கப்பட்டு உயிரிழந்ததும், உடலை முள்வேலியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. மேலும், இறந்த நபா் மது போதையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அத்திப்பள்ளி, ஆனேக்கல், சா்ஜாபுரம், மாலூா், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களிலும், ஒசூா் மாநகரம், அட்கோ, சிப்காட், மத்திகிரி, நல்லூா் பகுதிகளிலும் யாரேனும் காணாமல் போனாா்களா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்ட அத்திப்பள்ளி போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.