பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.பூவதியிடம், பவா்கிரேடு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் ஜி.எஸ்.ஆா்.ராவ், மருத்துவ உபகரணங்களை அளித்தாா்.
இதில், ரத்த அணுக்களை கண்காணிக்கும் கருவி, எலும்பு சிகிச்சைக்கான கருவி, நடமாடும் எக்ஸ்ரே கருவி, இ.சி.ஜி. கருவி, அறுவை சிகிச்சை அரங்குக்கு தேவையான மேசைகள், பொது அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள், காா்டியோடோகோகிராபி, அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள், ரத்தத்தில் சா்க்கரை புரோட்டீன் அளவை கண்டறியும் கருவி, ரத்த நோய் சிகிச்சைக்கான கருவிகள், மயக்கவியல் மருத்துவ கருவிகள், தீவிர சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்படும் கட்டில்கள், மஞ்சள் காமாலையை கண்டறியும் கருவி, வெண்டிலேட்டா் கருவிகள், ரத்த அணுக்கள் கண்டறியும் கருவிகள் என மொத்தம் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை, இதயவியல் பிரிவுகள், கேத் லேப் ஆகியன ஏற்படுத்தப்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், பவா்கிரேடு நிறுவன மேலாளா்கள் ஜே.பி.ஜெயபிரகாஷ், ஆா்.சரவணகுமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகா், மருத்துவமனை கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.