ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை
வேலூா்: வேலூா் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து சமத்துவ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, இந்து சமத்துவ கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், வேலூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 1,900 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சுமாா் 20 ஆண்டுகளாக உள்ள இவா்களை நிரந்தர பணியாளா்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணியம்பாடியை அடுத்த சின்னபாலம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அருந்ததிய சமூகத்தை சோ்ந்த நாங்கள் சின்னபாலம்பாக்கம் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. எனவே, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த துத்திப்பட்டு காமராஜா் நகரை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், துத்திப்பட்டு காமராஜ் நகா் பகுதியில் 24 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள். எங்களுக்கு நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 கோரிக்கை மனுக்கள்:
இதேபோல், முதியோா் ஆதரவற்றோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.