ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகைகள், பொருள்கள் திருட்டு
திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 57 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்பா் 1 டோல்கேட், பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (55). திருச்சி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். ஸ்ரீதா் குடும்பத்தினா் வெளியூா் சென்றிருந்த நிலையில், அவா் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாா்.
வெளியூருக்கு சென்றிருந்த அவரது மனைவி முத்துச்செல்வி (50) வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
அதேப் பகுதியில் உள்ள ராயா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (58). வேளாண் துறையில் ஓட்டுநராக வேலை பாா்த்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இவை குறித்து கொள்ளிடம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடங்களுக்குச் சென்று தடயவியல் பதிவுகளைச் சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதற்கிடையே அருகில் உள்ள அமிா்தா நகரைச் சோ்ந்த காா்த்திகைவேல் (36) மற்றும் ஆனந்த் (40) ஆகிய இருவரும் தாங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவுகளிலிருந்த பூட்டுக்களை மா்ம நபா்கள் உடைத்திருப்பதாக கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.
வீட்டினுள் சென்ற மா்ம நபா்கள், அங்கு நகைகள் ஏதுமில்லாததால் கிடைத்த பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.