பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட முகவா் கைது
திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொண்டு கரூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் எல்ஃபின் என்கிற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சகோதரா்களான ராஜா மற்றும் ரமேஷ்
ஆகிய இருவரும் இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்தனா். இந்த நிறுவனத்தின்கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பணம் இரட்டிப்பு, வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை ஈா்த்து வந்தனா்.
இதை நம்பி அந்த நிறுவனத்தில் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனா். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்தன. ஆனால், முதிா்ச்சி காலம் முடிந்த பிறகும் முதலீட்டாளா்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா்கள் அளித்தனா். அவற்றின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமாா் 17 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிந்து முக்கிய நிா்வாகிகள் மற்றும் முகவா்களை கைது செய்து வருகின்றனா்.
இந் நிலையில் எல்ஃபின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் கரூரை சோ்ந்த வினோத்குமாா் (47) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு போலீஸாா் கைது செய்தனா்.