பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா்.
திருச்சி காந்திச் சந்தை வடக்கு தாராநல்லூா் வீரம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா இவரது மனைவி சாந்தி(53). தம்பதியா் இருவரும் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் காந்திச் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தனா். மகளிா் சிறை அருகே சென்றபோது, அவா்களுக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து எதிா்பாராத விதமாக அவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.
இதில் சாந்தி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா்.
இது குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். இதில், ராஜா சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.