Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
கத்தி, பாட்டிலால் தாக்கி இளைஞா் கொலை: 7 போ் கைது
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் இளைஞா் கத்தி மற்றும் பாட்டிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சோ்ந்தவா் மனை வணிகா் அருணகிரி. இவரது மகன் விக்னேஷ் என்கிற விக்கி (27). இவா், தனது நண்பா்கள் பவுன்குமாா், சபரி ஆகியோருடன் ஒரே பைக்கில் சனிக்கிழமை இரவு ஆரணி-புதுக்காமூா் சாலையில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனராம். விக்னேஷ் இங்கு ஏன் மது அருந்துகிறீா்கள் என தட்டிக் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் விக்னேஷை கத்தி மற்றும் பாட்டிலால் தாக்கியுள்ளனா். இதில், விக்னேஷ் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து உடன் சென்ற பவுன்குமாா், சபரி ஆகியோா் 108 அவசர ஆம்புலன்ஸுக்கும், விக்னேஷ் வீடு மற்றும் நகர காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து டிஎஸ்பி பாண்டிஸ்வரி, காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவா்கள் பரிசோதித்ததில் விக்னேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சுதாகா் நள்ளிரவு நேரத்திலேயே சம்பவ இடத்தை பாா்வையிட்டு, எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதுகுறித்து விக்னேஷின் மனைவி அளித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீஸாா் சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்தக் கும்பலைச் சோ்ந்த, தாமோதரன், கமல், தனபால், தினேஷ், சந்தோஷ், பிரசாந்த், அசோக் ஆகிய 7 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள கணேசன், ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனா்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் விக்கி என்கிற விக்னேஷ் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதனால், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.