கனமழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் அரசு தயாராக உள்ளது: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும், அரசு அதிகாரிகளும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் அடுத்து வரும் இரு நாள்களில், டெல்டா மாவட்டங்களுக்கு மழைக்கான அறிவிப்பு இருக்கும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மழலையர் பள்ளி வகுப்பறைகளைத் தொடங்கி வைத்தார்.
எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஐந்து மழலையர் வகுப்பறைகள், விளையாட்டுத் திடலுடன் ரூ.69 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் ஆசிரியர்கள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், மழை பெய்யும் அல்லது பெய்யாது என அரசு எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதிகாரிகள் உள்பட அனைவரும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் தமிழகம் சார்பாக என்ன கோரிக்கைகள் முன்வைத்துப் பேசுவார்கள் என கேள்வி எழுப்பியதற்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் நடத்தி அவர்களுக்கு என்ன மாதிரியான விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம். மேலும் தமிழ்நாடு நலன் சார்ந்து பேசுவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.
அதானி விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே உரிய முறையில் பதில் அளித்துள்ளார் என்றும் அதானி விவகாரம் குறித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு, ஏதாவது ஒரு அறிக்கை நாள் தோறும் விடுக்கிறார். எனவே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.