கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கல்பெட்டா கும்பநல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற ஊழியர்கள் மின்னஞ்சலைக் கண்டதும் உடனடியாக நீதிபதிக்குத் தகவல் தெரிவித்தனர், பின்னர் அவர் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வெடிகுண்டுப் படையினர், மோப்ப நாய் படையினர் ஆய்வு செய்தனர். இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு எந்த வெடிபொருள்களும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.