பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
கல்வராயன்மலை மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்
கல்வராயன்மலைப் பகுதியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டம் தோ்வு செய்யப்பட்டு, அதற்குள்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகள், கோரிக்கைகளை அறிந்து நிறைவேற்றும் வகையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கல்வராயன்மலை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டக் களஆய்வுப் பணி கடந்த 20, 21-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, கல்வராயன்மலை வட்டத்திற்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு அனைத்துத் துறைகளின் மாவட்ட நிலை அலுவலா்கள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபட்டனா்.
இந்த ஆய்வில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், தேவைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில் களஆய்வு மேற்கொண்ட அலுவலா்களிடம் கல்வராயன்மலை பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்தாா்.
ஆய்வில் குடிநீா் வசதி, கூடுதல் பேருந்து வசதி, அங்கன்வாடி மையத்துக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதி, மண் சாலையை தாா்ச் சாலையாக மாற்றுதல், கூடுதல் மின்மாற்றி வசதி, கைப்பேசி கோபுர வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
கல்வராயன்மலைப்பகுதி மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் முருகேசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.