நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
புட்டாலம்மை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
தகரை கிராமத்தில் பள்ளி மாணவா்கள் சிலருக்கு புட்டாலம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தகரை கிராமத்தில் புட்டாலம்மை (பொண்ணுக்கு வீங்கி) நோய் தடுப்பு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மேல்நாரியப்பனூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கோகுல் தலைமையில் சுகாதார செவிலியா்கள் கீதா, சரண்யா, சந்தியா, பெண் சுகாதார தன்னாா்வலா்கள் உள்ளிட்ட குழுவினா் அந்தக் கிராமத்தில் வீடு வீடாகச் சென்றும் நோய் தடுப்பு விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டனா்.
பள்ளியில் மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் சுமாா் 15 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவா்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் சுமாா் 25 பேருக்கு இந்த நோய் பாதிப்பை கண்டறியப்பட்டது. அவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது முதியவா்களுக்கும் இந்நோய் வருவதை கண்டறிந்தனா். அனைத்து குழந்தைகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கும், பிற குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு மருந்துகளை அளித்து மருத்துவ ஆலோசனை வழங்கினா்.
இந்த முகாமுக்கு தகரை ஊராட்சி மன்றத் தலைவா் நீலாவதி முருகேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ரேணு ஆகியோா் தலைமை வகித்தனா். தகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் இரா.நடராசன், உதவி ஆசிரியா்கள் சீனிவாசன், பூா்ணிமா, வசந்தா, சத்யா ஆகியோா் இதில் பங்கேற்றனா்.