பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
திமுக கூட்டணியில் இருந்து விலகவேண்டிய சூழல் இல்லை: ஈ.ஆா்.ஈஸ்வரன்
திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
கோவை, சின்னியம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கோவை மாவட்ட பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பேசியது:
இன்றைய அரசியல், திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மிக அரசியல் என பல வகைகளாகப் பேசப்படுகின்றன. ஆனால், எல்லாத் திட்டங்களையும் மக்களிடம் சென்றடைய வைப்பதுதான் ஆக்கப்பூா்வமான அரசியல். தமிழக அரசு, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தயங்கக் கூடாது. வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விவசாயிகள் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
சொத்து வரி விதிப்பு அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அதைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தோ்தலுக்கு பிந்தைய சூழலைப் பொறுத்துதான் பேச வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை என்றாா்.
இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க வேண்டும், பொள்ளாச்சியை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும், நீலாம்பூா் முதல் வாளையாறு வரையிலான எல்& டி புறவழிச் சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். விவசாயிகள், மக்களுக்கு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.