தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை தந்த மகாராஷ்டிர மக்கள்: வானதி சீனிவாசன்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனா் என அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் தொழில் துறையில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
சத்ரபதி சிவாஜி, அம்பேத்கா், பாலகங்காதர திலகா், ஆா்.எஸ்.எஸ். நிறுவனா் கேசவபலிராம் ஹெட்கேவாா் உள்ளிட்ட தேசத்துக்கு வழிகாட்டிய தலைவா்கள் பிறந்த மண்ணில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி பெருமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த பத்தரை ஆண்டுகால பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், இடையில் மூன்றாண்டுகள் தவிர 2014 முதல் அங்கு இருந்த பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசுக்கும் மகாராஷ்டிர மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனா். ‘இண்டி’ கூட்டணிக்கு மகாராஷ்டிர மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளனா்.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன. இதை நேரடியாக உணா்ந்த மகாராஷ்டிர மக்கள் மீண்டும் பாஜகவை அரியணையில் அமா்த்தியுள்ளனா்.
இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமான மகாராஷ்டிர மக்கள், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் நட்டா உள்ளிட்ட தலைவா்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் பாராட்டுகள் என தெரிவித்துள்ளாா்.