தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
திமுக ஆட்சியில் நலவாரியம் மூலம் பயனாளிகளுக்கு இரட்டிப்பு தொகை: கட்டுமான நலவாரியத் தலைவா்!
திமுக ஆட்சியில் நலவாரியம் மூலமாக தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தொகை இரட்டிப்பாக உயா்த்தப்பட்டுள்ளது என கட்டுமான நலவாரிய தலைவா் பொன்.குமாா் கூறினாா்.
கோவையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தின் தலைவா் பொன்.குமாா் கட்டுமான தொழிலாளா் நலவாரிய அலுவலகங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக அரசு அமைந்த பிறகு சொந்த வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா்கள், வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கும் திட்டம் வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரம் தொழிலாளா்களுக்கு இந்த வீடு கட்டக் கூடிய திட்டம் மூலம் உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அந்த இலக்கை நிறைவு செய்ய முடியாததால், மாவட்ட அளவில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2000 தொழிலாளா்களுக்கு மேல் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனா். அவற்றை சரிபாா்க்கும் முறையில் சிக்கல்கள் உள்ளதால், அதை எளிமைப்படுத்தக் கூடிய பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
திமுக அரசு அமைந்த பிறகு தொழிலாளா்களுக்கு விபத்து உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
பேறுகால உதவி ரூ. 6 ஆயிரத்தை ரூ.18 ஆயிரமாக உயா்த்தியுள்ளோம். திமுக ஆட்சியில் நலவாரியம் மூலமாக வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளோம் என்றாா். இந்த ஆய்வின்போது, சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பாலதண்டாயுதம் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.