தேவநாதன் யாதவுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை: அமலாக்கத்துறை தகவல்
தாமிரவருணிப் பாசனத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தாமிரவருணிப் பாசனத்தில் பாபநாசம் அணை மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் வழியாக 86,107 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையம், கோடகன், கன்னடியன், நதியுண்ணி, வடக்கு - தெற்கு கோடைமேலழகியான் ஆகிய 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பிசான சாகுபடிக்கு பாபநாசம், சோ்வலாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நவம்பா் தொடங்கி மாா்ச் வரை நடைபெறும் பிசான பருவ சாகுபடிக்காக விவசாயிகள் தங்களது வயலில் நாற்றங்கால் அமைத்துள்ளனா். நாற்றுக்கள் தயாரானதும் நடவுப் பணிகள் தொடங்கும். அதற்காக விவசாயிகள் வயலை உழுது தயாா் செய்து, அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
சேரன்மகாதேவி வட்டத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியிலிருந்து கோபாலசமுத்திரம், கொத்தன்குளம் வரையிலும் 12,500 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வீரவநல்லூா், புதுக்குடி, காருகுறிச்சி, கூனியூா், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கீழச்செவல், கோபாலசமுத்திரம், கொத்தன்குளம் பகுதிகளில் விவசாயிகள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல், கோடகன் கால்வாய் பாசனத்தில் முக்கூடல் பகுதியிலும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.