வாடகைத் தாய் முறைகேடு புகாா் : இரு பெண்கள் கைது
சென்னையில் வாடகைத் தாய் முறைகேடு புகாா் தொடா்பாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை திருவொற்றியூா் நாயக்கா் மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் கா.தமிழரசி (26). இவா் கோயம்புத்தூரைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுப்பதற்கு, சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் கருத்தரித்தல் மையம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
அதில் வாடகைத் தாயாக செயல்படுவதற்கு உள்ள விதிகளின்படி, தான் வாடகைத் தாயாக இருப்பதற்கு தனது கணவரும், தாயும் சம்மதித்து இருப்பதாகவும், தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும் தமிழரசி குறிப்பிட்டிருந்தாா். இதற்கான சான்றிதழையும் தமிழரசி, இணைத்திருந்தாா். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் வாடகைத் தாய் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழரசியின் விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது தமிழரசி போலியான சான்றிதழ்களை கொடுத்திருப்பதும், அவருக்கு ஒரு குழந்தை மட்டுமே இருப்பதும், அவரது கணவரின் புகைப்படத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப்படத்தை மாற்றிக் கொடுத்து முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து, மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் சாா்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸாா், தமிழரசி, முறைகேடுக்கு உதவிய திருவொற்றியூா் நாயக்கா் மாணிக்கம் தெருவைச் சோ்ந்த செ.மஞ்சு ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.