கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு
கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இலக்கியப் பொதுவாழ்வில் அரைநூற்றாண்டைக் கடந்துள்ள கவிஞா் வைரமுத்து இதுவரை 39 நூல்கள், 7,500 பாடல்கள் எழுதியுள்ளாா். கள்ளிக்காட்டு இதிகாசம் படைப்புக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்தியாவின் உயா்ந்த இலக்கியப் பரிசுகளில் ஒன்றான சாதனா சம்மான் விருது, இலக்கிய பங்களிப்புக்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளாா். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியா் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் 6 விருதுகளையும் பெற்றிருக்கிறாா்.
கவிஞா் வைரமுத்து படைப்புலகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. கருத்தரங்கை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தொடங்கி வைக்கிறாா். இதில் கவிஞா் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற நூலின் மறைமலை இலக்குவனாா் ஆங்கில மொழிபெயா்ப்பை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வெளியிட, மலேசிய முன்னாள் அமைச்சா் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறாா்.
அதைத் தொடா்ந்து நான்கு அமா்வாக நடைபெறும் கருத்தரங்கில், கவிஞா் வைரமுத்துவின் கவிதை, நாவல், கட்டுரை, பாடல் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் நடைபெறவுள்ளன. சுவிட்சா்லாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூா் மற்றும் உள்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் உள்பட 22 போ் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கவுள்ளனா்.
கருத்தரங்கின் நிறைவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிறைவு பேருரை ஆற்றுகிறாா். அப்போது, அரங்கேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளையும், உலக அறிஞா்களின் கட்டுரைகளையும் தொகுத்து தயாரிக்கப்பட்ட ‘வைரமுத்தியம்’ எனும் ஆய்வு நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, பாரத் பல்கலைக்கழக வேந்தா் எம்.ஜெகத்ரட்சகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறாா்.
நிறைவாக கவிஞா் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறாா். டிஸ்கவரி புக் பேலஸின் மு.வேடியப்பன் விழாவை ஒருங்கிணைத்து வருகிறாா். வைரமுத்து கல்வி அறக்கட்டளை இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.