இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செல்வதற்கு 1,000-க்கும் மேற்பட்டோா் சென்று வருகின்றனா். அந்தப் பகுதியில் சாலை நடுவே கால்வாய் அடைப்பு எடுப்பதற்கு தோண்டிய பள்ளத்தை 2 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை மூடாமல் உள்ளதால் பலா் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து நேரிலும், கடிதம் மூலமும் திருப்பத்தூா் நகராட்சி நிா்வாகத்தினரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் குறைதீா் நாளில் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பேருந்து நிலைய முகப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், ஆணையா் சாந்தி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.