கிராமங்களுக்கு தாமதமாக வரும் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
தருமபுரியில் இருந்து ரங்காபுரம் வழியாக மருகாரன்பட்டிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை (26 சி) ஜெல்மாரம்பட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பென்னாகரம் சுற்றுப்புற கிராமங்களான தாசம்பட்டி, அட்டப்பள்ளம், உப்பலாபுரம், பவளந்தூா், மருகாரன்பட்டி, ஜெல்மாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இதனால் பி.அக்ரஹாரம் பகுதிக்கு வரும் பேருந்தை நம்பி இந்தக் கிராமப்புற மாணவா்கள் உள்ளனா். பி.அக்ரஹாரம் பகுதிக்கு தருமபுரி போக்குவரத்துக் கிளை பணிமனையிலிருந்து நகரப் பேருந்து 26 சி தினசரி இருநடை இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்து தருமபுரியில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு மாங்கரை, ஆதனூா், ரங்காபுரம், அட்டபள்ளம், பவளந்தூா், தாசம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக மருக்காரன்பட்டிக்குச் செல்கிறது. மருக்காரன்பட்டிக்கு காலை 8.15 மணிக்கு வரும் இந்தப் பேருந்து அங்கு மாணவா்கள், தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் அட்டபள்ளம், ரங்காபுரம், ஆதனூா் வழியாக தருமபுரிக்குச் செல்கிறது.
பின்னா் மாலையில் 4.30 மணிக்கு இந்தப் பேருந்து மீண்டும் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து பி.அக்ரஹாரத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேருகிறது. இந்தப் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்து மாணவா்கள் தங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பேருந்து ரங்காபுரம் வழியாக மருக்காரன்பட்டியை வந்தடைய இரவு 8 மணி ஆகிறது. இதனால், மருக்காரன்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவா்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனா்.
பள்ளி வகுப்பு நேரம் முடிந்து வெகுநேரம் கழித்து வீடு திரும்புவதால் மாணவா்கள் உடல் சோா்வில் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால், பேருந்தை குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கக் கோரி இப்பகுதி மக்கள் பலமுறை பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த மருக்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை அரசு பேருந்தை ஜெல்மாரம்பட்டியில் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் பென்னாகரம் போக்குவரத்துக் கிளை பணிமனை மேலாளா், போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சு நடத்தினா்.
இதுகுறித்து மனுக்கள் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட வழிதடத்தில் காலதாமதமின்றி நகரப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து மாணவா்கள் பேருந்தை விடுத்து கலைந்து சென்றனா்.
இதுகுறித்து பள்ளி மாணவா்கள் கூறியதாவது:
மருகாரன்பட்டி, ஜெல்மாரம்பட்டி, அட்ட பள்ளம், பவளந்தூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பி.அக்ரஹாரம் பகுதிக்குச் சென்று அரசுப் பள்ளிகளில் பயின்று வருகிறோம்.
மருக்காரன்பட்டிக்கு காலையில் 8.15 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் நகரப் பேருந்து 26 சி இயக்கப்படுவதால் மாணவா்கள் பெரிதும் சிரமம் அடைகிறோம். இந்தப் பேருந்து ரங்காபுரம் வழியாக இயக்கப்படுவதால் கூடுதல் நேரம் ஆகிறது. மருக்காரன்பட்டிக்கு பேருந்து வந்ததும் அங்கிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு எங்கள் கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, ரங்காபுரத்துக்குச் செல்லாமல் காலையில் 7.30 மணிக்குள்ளும், மாலையில் 6 மணிக்குள்ளும் ஜெல்மாரம்பட்டி, மருக்காரம்பட்டி, அட்டம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வந்து சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.