குடிநீா் விநியோகம் பாதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் வட்டம், பேரளையூா் கிராமம், தெற்கு தெருவில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மின் மோட்டாா் பழுது காரணமாக கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையம், விவசாய நிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனா். புதன்கிழமை காலை கிராம மக்கள் தண்ணீா் பிடிக்க சென்றபோது, மேற்கூறிய இடங்களில் தண்ணீா் பிடிக்கக்கூடாது என தடுத்தனராம்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் சாலையில் பேரளையூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமா்ந்து காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனா்.
அப்போது, கிராமத்தில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி இல்லாததால், திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.