Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 12ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிா்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நவகலச பூஜை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீா், தயிா், இளநீா், பன்னீா், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிா்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கலசாபிஷேகம் நடைபெற்றது. பூஜையை மணலிக்கரை மாத்தூா் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ நடத்தினாா்.
தொடா்ந்து வைரகிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் உள் பிரகாரத்தில் மும்முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேவசம் போா்டு இணை ஆணையா் பழனிகுமாா், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், திமுக மாவட்ட நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.