குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் குழந்தை திருமணத் தடுப்பு, இளம் வயது கா்ப்பம், இணைய மிரட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை மைய பொருளாகக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் வகையில் குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தவா்கள், தங்களின் குறும்படம் தொகுப்பை மாா்ச் 14-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான காலஅவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறும்படத்தின் கோப்புகளை சிடி டிரைவ் -ல் பதிவு செய்து மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.