`குறைந்தபட்சம் 45 நாள்கள் ஆயுள் கொண்ட பொருள்களை மட்டுமே...'- இகாமர்ஸ் தளங்களுக்கு FSSAI வலியுறுத்தல்
ஆன்லைனில் டெலிவரி செய்யப்படும் உணவுப் பொருள்கள் அதன் தேக்க ஆயுளில் 30% மீதமுள்ளதா, காலாவதி ஆவதற்கு 45 நாள்கள் மீதம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI, Swiggy, Zomato, Bigbasket போன்ற இ-காமர்ஸ் உணவு நிறுவனங்களின், தயாரிப்புகளுக்கு குறைந்தபட்ச ஆயுளை நிர்ணயித்துள்ளது.
FSSAI இன் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகர்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான உணவு கையாளுதல் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் இ-காமர்ஸ் உணவு வணிக ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் டெலிவரி ஆவதற்கு முன் அதன் தேக்க 30% அல்லது 45 நாள்களுக்கு மீதம் இருப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்குமாறு FBO’s (Petty Food Business Operators) களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த நடவடிக்கையானது காலாவதியான மற்றும் விரைவில் காலாவதியாகும் தயாரிப்புகளை வழங்குவதை தடுக்கும்.
மேலும், நுகர்வோர்களுக்கு துல்லியமான தயாரிப்பு தகவல்கள் வழங்கவும் மற்றும் உணவு டெலிவரியில் வெளிப்படைத் தன்மை இருக்கவும் வலியுறுத்தியதுடன், ஆன்லைனில் தவறான அல்லது நம்பகமற்ற உரிமைக்கோரல்களை செய்வதற்கு எதிராக FBO-க்களை எச்சரித்துள்ளார்.
முறையான FSSAI உரிமம் அல்லது பதிவு இல்லாமல் எந்த ஒரு பொருள்களையும் இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பான உணவு கையாளுதலை உறுதி செய்ய தனிப்பட்ட முறையில் டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறியதுடன், இதற்காக டெலிவரி பணியாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பாதுகாப்பு சுகாதார நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான விரிவான பயிற்சி திட்டங்களை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தேவையற்ற உணவு கலப்படங்களை தடுப்பதற்கு உணவு மற்றும் உணவு அல்லாத பொருள்களை தனித்தனியாக டெலிவரி செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார்.
நுகர்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், டிஜிட்டல் உணவு சந்தைகளில் நம்பிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதிலும் ஆன்லைன் தளங்களின் பங்கு குறித்தும் பேசியுள்ளார்.