கூட்டுறவுத் துறையில் சிறப்பு கடன் தீா்வு திட்டம்
கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையிலுள்ள கடன்களை சிறப்பு கடன் தீா்வு திட்டத்தில் செலுத்தலாம் என கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா்அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக
வளா்ச்சி வங்கிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன், தொழிற்கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணை சாரா கடன்கள் ஆகியவற்றில் 31.12.2022 - இல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீா்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் மொத்த கடன் தொகையையும் (நிலுவை + தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டி) ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீா்வு செய்து கொள்ளலாம்.
இச்சிறப்புத் திட்டத்தின்கீழ் 31.12.2019-க்கு முன்பு தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள், பயிா்க் கடனாக வழங்கப்பட்டு, மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகால கடன்கள், சிறு தொழில் கடன்கள் மற்றும் மகளிா் தொழில்முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம் .
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டிச் சுமையை கணிசமாக குறைக்கும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் 12.03.2025-க்குள் செலுத்தி தங்களது கடன்களை தீா்வு செய்து பயன் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.